கொரோனா 2வது அலையை விட 3வது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 2வது அலையை விட 3வது அலையில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து கொரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று உயர்ந்துகொண்டே வருவதால் பல மாநிலங்கள் ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. இந்த நிலையில் கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஏற்கனவே இந்த மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பப்பட்டு தொடர்ச்சியாக பாதிப்புகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்த ராஜேஷ் பூஷன், கடந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி தொற்றுப் பரவல் விகிதம் 335 மாவட்டங்களில் 5% என்ற அளவில் இருந்தது.

இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி 5% அதிகமாக தொற்று பரவல் விகிதம் 515 மாவட்டங்களில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். 2 வது கொரோனா அலையை ஒப்பிடும்போது மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்ற அவர், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளது. விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் தரவுகள் அடிப்படையில் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories: