குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறை வழக்கில் முதல்முறையாக ஒருவருக்கு தண்டனை

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் முதன்முறையாக ஒருவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக முதன்முறையாக ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனோர் என்ற 73 வயது மூதாட்டியின் வீட்டை வன்முறை கும்பல் சூறையாடியதுடன் தீவைத்து கொளுத்தியது. குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த போது முற்றுகையிட்ட வன்முறை கும்பல் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தினேஷ் யாதவ் என்பவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது. தினேஷ் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளில் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: