×

83 பவுன், 2.5 கிலோ வெள்ளியுடன் 4 கொள்ளையர்கள் அதிரடி கைது

சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி பழனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அரவிந்த் (25), சேலத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு லீபஜார் பகுதியில் வந்துள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ₹2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றது. இதுபற்றி பள்ளப்பட்டி போலீசில் அரவிந்த் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபல கொள்ளையனான சேலம் சின்னேரி வயல்காடு சினிமா நகரை சேர்ந்த பாண்டியன் (35) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அதிரடியாக பாண்டியனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது கூட்டாளிகளான குமார் (30), அண்ணாமலை (37),  சங்கர் (40) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

4 பேரும், சேலம், விழுப்புரம் மாவட்டத்தில் 11 வீடுகளில் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் பள்ளப்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பிரபல நகைக்கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து 11 பவுன் நகையை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து கொள்ளையன் பாண்டியன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், கொள்ளையடித்த 83 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி, ₹1.25 லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனர். தற்போது கைதாகியுள்ள பாண்டியன் மீது மட்டும் 20க்கும் மேற்பட்ட கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.


Tags : 83 pounds, 2.5 kg silver, 4 robbers, arrested
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...