பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பள்ளி மாணவி

*உதயநிதி ஸ்டாலிடம் வழங்க ஆர்வம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கந்தசாமி வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மூத்த மகள் மிருதுளா (13), தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறு வயது முதல் பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். குறுகிய ஆண்டுகளிலேயே, பல்வேறு பழங்கால நாணயங்களை சேகரித்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

இதில், 50வது சுதந்திர வெள்ளி விழா, பொன் விழா மற்றும் உலக தமிழ் மாநாட்டை நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட நாணயங்கள்.  மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பகவத்சிங், நேதாஜி, நேரு, லால் பகதூர் சாஸ்திரி, அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் நூற்றாண்டு நாணயங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

இதுதவிர, உலக உழவர் தினம், பல்லுயிர் தினம் நினைவாக வெளியிடப்பட்ட நாணயங்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் குறித்து ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்ட நாணயங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பழங்கால ரூபாய் நோட்டுகளும் சேகரித்துள்ளார்.இதுகுறித்து மாணவி மிருதுளா கூறுகையில்,``எனது தாத்தா, பாட்டியும் நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதுபோல் நானும், சிறு வயதிலிருந்தே பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேர்ப்பதை ஆர்வம் காட்டி வந்தேன்.

மாணவ, மாணவிகள் செல்போனில் வினையாட்டு, சமூக வலை தளங்களில் பொழுதுபோக்கு என மூழ்கியுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி, வாழ்க்கையை தாமாகவே சீரழிப்பது வேதனையாக உள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல், கிடைக்கின்ற கொஞ்ச காலத்தையும் பயனுள்ளதாக அமையவும், நாணயம் சேகரிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். நான் சேகரித்து வைத்துள்ள நாணயங்களை, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க உள்ளேன். மேலும், இந்த நாணயங்களை பாதுகாப்பாக அருங்காட்சியத்தில் வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: