மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் ஊட்டி மரவியல் பூங்காவில் அலங்கார செடிகளுக்கு பாதுகாப்பு

ஊட்டி :ஊட்டியில் மீண்டும் பனிப்பொழிவு தீவிரம் காட்ட துவங்கியுள்ள நிலையில் மரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும்.

ஆரம்பத்தில் நீர்பனி பொழிவாகவும், தொடர்ந்து உறைபனி பொழிவும் துவங்கும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி,கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைபனி பொழிவு கொட்டியது. ஊட்டி அருகே தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி முதல் மைனஸ் 1 டிகிரிக்கும் கீழ் சென்றது. இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது.

இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்தது. இதனால் தேயிலை செடி, புல்வெளிகள் கருகுவதில் இருந்து தப்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு தீவிரமடைய துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள அரங்கார செடிகள் பாதிக்காத வகையில் கோத்தகிரி தாகை செடிகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

Related Stories: