குஜிலியம்பாறை அருகே சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

*இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் அங்கன்வாடி மையம் கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால், எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதில் அங்கன்வாடி மைய ஆசிரியை மற்றும் சமையலர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால் நாளடைவில் விரிசல் எற்பட்டுள்ளது. மையத்தில் பொருட்கள் வைக்கும் இருப்பு அறை மற்றும் சமையல் அறையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்துள்ளது. இதனால் கம்பிகள் வெளியே தெரிகின்றன. குழந்தைகள் அமர்ந்து சாப்பிடும் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் உடைந்த நிலையில் உள்ளது. பக்கவாட்டுச் சுவரும் இடிந்த நிலையில் உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த தொடர் மழையால் கட்டிடம் வலுவிழந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது அங்கன்வாடி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கப்படவில்லை. எனவே  சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவற்றை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் சேதமடைந்த இந்த அங்கன்வாடி மையக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் இதுவரை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இக்கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற ஒரு அச்சத்துடன் கிராம மக்கள் உள்ளனர். இது மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்கள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கிச் செல்தல், மருத்துவ ஆலோசனை பெறுதல் ஆகியவற்றிற்கு இந்த மையத்திற்கு வந்து செல்கின்றனர். கட்டிடம் சேதமடைந்த நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் ஒருவித உயிர் பயத்துடன் வருகின்றனர் என்றனர்.

Related Stories: