ஆண்டாள் கோயில் குளத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்

*மைய மண்டபத்தில் ஏறி ‘டைவ்’ அடிப்பதால் விபரீதம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் எச்சரிக்கையை மீறி போட்டி போட்டுக் கொண்டு நடு குளத்திற்குச் சென்று சிலர் குளிக்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்ததால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் ஆகியவை நிரம்பின. திருவில்லிப்புத்தூர் நகரில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பின.

அதிலும் குறிப்பாக ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் பல வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. குளம் நிரம்பிய உடனேயே ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் குளம் இருக்கும் பகுதியில் எச்சரிக்கை போர்டு வைத்திருந்தனர். அதில், கோயில் குளத்தில் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் குளத்தில் இறங்கி குளிக்கவோ, கை கால்களை இறங்கி கழுவவோ கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை போர்டு வைத்தனர்.

ஆனால் சில வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக கோயில் குளத்தில் டைவ் அடித்து குளித்து வருகின்றனர். இந்த இளைஞர்களில் சிலர் கரையிலிருந்து குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு வேகமாக நீந்தி செல்கின்றனர். குளிக்கச் சென்ற மாணவர்கள் சிலர் மண்டபத்தின் மேல் ஏறி அங்கிருந்து டைவ் அடித்தும் குளித்து வருகின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து திருமுக்குளம் பகுதியில் குடியிருந்து வரும் மாரியப்பன் கூறும்போது, குளம் நிரம்பி சில மாதங்களுக்குள் முதியவர் ஒருவர், மூதாட்டி ஒருவர், மாணவர் ஒருவர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் வைத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் தினமும் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு மைய மண்டபத்திற்கு ஆபத்தை உணராமல் குளிக்கச் சென்று வருகின்றனர் என கவலையுடன் தெரிவித்தார்.

Related Stories: