இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை.!

சென்னை: இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயிக்கு ஐகோர்ட்  இடைக்கால தடை விதித்ததுள்ளது. டுவிட்டரில் ‘#metoo’ என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களை பதிவிட்டனர். இதில் உலகம் முழுவதும் பல பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அந்த வகையில் #metoo ஹேஷ்டேக்கில் இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை, பாலியல் குற்றாச்சாட்டை கூறியிருந்தார். இதனை மறுத்த இயக்குனர் சுசி கணேசன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசி கணேசன் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இது தொடர்பாக இயக்குனர் சுசி கணேசன் குறித்து பாடகி சின்மயியும், கவிஞர் லீனா மணிமேகலையும் சில கருத்துக்களை பதிவு செய்தனர்.

அவை உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறி, அவர்கள் இருவரும் தனக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இயக்குனர் சுசி கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சுசி கணேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மனுதாரரை பழிவாங்கும் நோக்கில் சின்மயியும், லீனா மணிமேகலையும் தொடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைய உள்ள நிலையில், திரைத்துறையில் சுசி கணேசனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் வாதிட்டார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகக் கூறி, இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பாடகி சின்மயிக்கும் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என பாடகி சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை, கூகுள், டுவிட்டர் மற்றும் தி மிண்ட் என்ற செய்தி இணையதளத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories: