யு 19 உலக கோப்பை; அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா கால்இறுதிக்கு தகுதி

டிரினிடாட்: 16 அணிகள் பங்கேற்றுள்ள 14வது யு19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடந்து வருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய நிலையில் நேற்று 2வது போட்டியில் அயர்லாந்துடன் மோதியது. இந்திய கேப்டன் யாஷ்துல் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் விளையாடவில்லை. இந்திய அணியை நிஷாந்த் சிந்து வழிநடத்தினார். டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஹர்னூர் சிங் 88, அங்கிரிஷ் ரகுவன்ஷி 79 ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து 39 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 174 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்னூர் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். பி பிரிவில் 2 வெற்றியுடன் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றது. வரும் 22ம் தேதி கடைசி லீக் போட்டியில் உகான்டாவை இந்தியா எதிர்கொள்கிறது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் டி பிரிவில் ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இன்று ஏ பிரிவில் இங்கிலாந்து-யுஏஇ, வங்கதேசம்-கனடா, சி பிரிவில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய கேப்டன் உள்பட 6 பேருக்கு கொரோனா

போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் யாஷ்துல், துணை கேப்டன் ஷேக்ரஷீத் மற்றும் ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மனவ் பராக், சித்தார்த் யாதவ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. கடைசி லீக் போட்டியிலும் 6 பேரும் விளையாடுவது சந்தேகம் தான்.

Related Stories: