மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமையாததால் தோல்வி; இந்திய கேப்டன் ராகுல் பேட்டி

பார்ல்: தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேற்று பார்ல் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன் குவித்தது. வான்டர் டஸன் 129, கேப்டன் பவுமா 110 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களே எடுத்தது. இதனால் 31 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. டஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்விக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், இது ஒரு நல்ல ஆட்டம். கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், நடுவில் எங்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. சேசிங்கின்போது 25 ஓவர் வரை நாங்கள் சம நிலையில் இருந்தோம். நாங்கள் எளிதாக துரத்துவோம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர்கள் நன்றாகப் பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20வது ஓவருக்குப் பிறகு பேட்டிங் செய்ய கடுமையாக மாறியதா என்று எனக்குத் தெரியவில்லை. விராட் மற்றும் ஷிகர் பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல பிட்ச். ‘துரதிர்ஷ்டவசமாக எங்களால் பார்ட்னர்ஷிப் பெற முடியவில்லை’ என்று கூறினர்.  290+ என்பது 20 ரன் கூடுதலாக இருந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு முக்கியம். நாங்கள் சிறிது காலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை, உலக கோப்பையை மனதில் வைத்துள்ளோம், சிறந்த லெவனைப் பெற விரும்புகிறோம். நாங்கள் தவறு செய்வோம், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம், என்றார். 2வது ஒருநாள் போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று இந்தியா பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: