கொரோனா இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுகள் தாமதம்: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுகள் தாமதம் செய்து வருவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கௌரவ் குமார் பன்சால் என்பவர் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இழப்பீடு மிகுந்த தாமதமாக வழங்கப்படுவது தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினர். ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பயன்படுத்தி உடனடியாக இழப்பீடு வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் அடுத்த விசாரணையை பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் கொரோனாவால் தாய், தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதிலும் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: