செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் திடீர் மறியல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு  மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலராக  பணியாற்றி வந்தவர்  அனுபமா. அவரை எவ்வித விசாரணை, முன் அறிவிப்பின்றி கடந்த 12ம் தேதி  அவசர அவசரமாக சிவகங்கை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்தனர்.இதனால், கலெக்டர் மற்றும் மருத்துவமனை முதல்வரை  கண்டித்து, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர்  தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், நிலைய மருத்துவ அலுவலரை பணியிடமாற்றம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவமனை முழுவதும்  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் நோயாளி மற்றும் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும். கொரோனா 3வது அலை அதிகளவில் பரவி வருவதால் அதை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்  பணியாளர்கள் என ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். அனைத்து ஊழியர்களையும் மரியாதை குறைவாக பேசுவதை மருத்துவமனை முதல்வர் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், மருத்துவமனை முதல்வர், மாவட்ட கலெக்டர், தமிழக சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் இதில் யாராவது ஒருவர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வார்த்தைக்கு வரவில்லை என்றால் இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆனால் இதுவரை மருத்துவமனை முதல்வரோ, கலெக்டர், சுகாதாரத்துறை செயலாளரோ யாரும், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து நேற்று  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என  100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நிலவியது. மருத்துவர்கள் போராட்டதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு நகர இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்களை, கைது செய்து அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்  அடைத்தனர். தொடந்து கலெக்டர் ராகுல்நாத், அங்கு சென்று, மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.நேற்று நடந்த போராட்டத்தின்போது கோரிக்கையை மையப்படுத்தி மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் இன்று மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: