திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலங்கள் ஏலம்: குத்தகைக்கு எடுத்த விவசாயிகள்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமாக சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களும், சென்னை, புதுச்சேரி, மறைமலைநகர், மயிலாப்பூர், மண்ணடி, திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு இடங்களில் வீட்டு மனைகள், கட்டிடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான விவசாய நிலங்களை திருப்போரூர், தண்டலம், கண்ணகப்பட்டு, காலவாக்கம் கிராம விவசாயிகள் குத்தகை அடிப்படையில் 3 தலைமுறைகளாக பயிர் செய்து வருகின்றனர்.குத்தகை அடிப்படையில் பயிர் செய்யும் நிலங்களை தவிர்த்து திருப்போரூர் கிராமத்தில் 75 ஏக்கர் 85 சென்ட் நிலங்களும், காலவாக்கம் கிராமத்தில் 10 ஏக்கர் 17 சென்ட் நிலங்களும், தண்டலம் கிராமத்தில் 43 ஏக்கர் 32 சென்ட் நிலங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் பயிர் வைக்கும் விவசாயிகளுக்கு வருடாந்திர குத்தகை அடிப்படையில் ஏலம் விட முடிவு செய்து, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்நிலையில், முதற்கட்டமாக திருப்போரூர் கிராமத்தில் உள்ள 75 ஏக்கர் 85 சென்ட் நிலங்கள், நேற்று ஏலம் விடப்பட்டன. கோயில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஏலத்தில், ஒவ்வொருவரும் ₹1000  முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து 100க்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்தனர்.முன்னதாக கோயில் நிலங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவற்றை ஏலம் விடக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், விவசாயிகள் ஏலம் எடுக்க ஆர்வமாக இருந்ததால் ஏலம் நடத்தப்படும் என அறிவித்து, தொடர்ந்து ஏலம் நடத்தப்பட்டது. கோயில் நிலங்கள் ஏலம் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: