கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (35). கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரி வைத்துள்ளார். இவரது மனைவி தீபா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், முடிச்சூர் அருகே வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ராஜேஷ், மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஏழுமலை (35) ஆகியோர் நேற்று காலை சென்றனர். அங்கு அவர்கள், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தொட்டியில் இருந்த கழிவுநீரை மோட்டார் மூலம் நிரப்பி, லாரியை அனுப்பினர். பின்னர், தொட்டியில் கடைசியாக தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற, ராஜேஷ் தொட்டிக்குள் இறங்கினார்.அந்தநேரத்தில், விஷவாயு தாக்கியதால் அவர் அலறியபடி மயங்கி விழுந்தார். உடனே, அவரை மீட்பதற்காக தொட்டியில் இறங்கிய ஏழுமலையையும் விஷவாயு தாக்கியது. இதில், இருவரும் தொட்டியின் உள்ளே மயங்கி விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், மணிமங்கலம் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தொட்டியில் கிடந்த சடலங்களை மீட்டனர். இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 2 பேர் ஈடுபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: