குடும்ப பிரச்னை காரணமாக 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை: மறைமலைநகரில் பரபரப்பு

செங்கல்பட்டு:  சென்னை புதுப்பேட்டை, காஞ்சி முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (44), ஆட்டோ டிரைவர். இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு, அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி (30) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற 2 மகள்கள் இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஞானவேல், அவரது 2 மகள்களும் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்கள். உறவினர்கள், அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, எழும்பூர் போலீசில், ஜெயந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை, தேடி வந்தனர்.இந்நிலையில், மறைமலைநகர் அருகே கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று காலை, 2 குழந்தைகளை ஒருவர், கட்டி பிடித்த நிலையில் சடலமாக மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்ததும், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மீட்பு படையினர், சடலங்களை மீட்டு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார், சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் விசாரித்தனர். அப்போது, கிணற்றுக்கு அருகே ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், ஞானவேலின் ஆதார் அட்டை, வாகன உரிமம் ஆகியவை இருந்தது. இதையடுத்து போலீசார், புதுப்பேட்டையில் காணாமல் போன ஞானவேல் என உறுதி செய்தனர்.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானவேல், தனது 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில், எழும்பூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அதில், ஜெயந்தி, தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, மனமுடைந்த ஞானவேல், ஆட்டோவில் தனது 2 மகள்களையும் அழைத்து சென்று கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

Related Stories: