பழநியில் 5 நாட்களுக்குப்பின் அனுமதி ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்: காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்

பழநி: பழநி கோயிலில் 5 நாட்களுக்குப்பின் அனுமதிக்கப்பட்டதால் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாள் தடை நீங்கி கோயில்களில் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா காலம் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் இருந்தது. நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் கிரிவீதியில் அமைக்கப்பட்டிருந்த வரிசை மண்டபங்களில் காத்திருந்தனர். நேற்று அதிகாலையே மலைக்கோயிலில் குவிந்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தரிசன வழி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது. நெரிசல் ஏற்படாத வகையில் சன்னதி வீதியில் இருந்து தடுப்புகள் அமைத்து, போதிய இடைவெளியில் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தைப்பூச தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் பலர் தங்கி இருந்து பழநி மலைக்கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி ஆட்டம், அலகு குத்துதல் போன்றவை செய்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பழநி வந்த பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நாளை நடைபெறும் தெப்பத்தேர் உற்சவத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை மற்றும் மற்ற கால பூஜைகள் நடந்தன. இதற்காக நேற்று முன்தினம் முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் நடைபயணத்தை தொடங்கினர். பெரும்பாலான பக்தர்கள் நேற்று முன்தினம் வரை ஆங்காங்கே உள்ள மண்டபங்களிலும், சத்திரங்களிலும், மரத்தடிகளிலும், நீர் நிலைகள் உள்ள பகுதிகளிலும் ஓய்வெடுத்து நேற்று காலை முதல் அலைஅலையாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். இதனால் கோயிலின் ரத வீதிகள் அனைத்திலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. முருக பக்தர்களால் திருச்செந்தூர் நகரமே ஸ்தம்பித்தது.

Related Stories: