சேலம் மத்திய சிறையில் 20 ஆயிரம் வாங்கிக்கொண்டு கைதிகளுக்கு செல்போன்: அதிகாரியே வழங்கியது கண்டுபிடிப்பு

சேலம்:  சேலம் மத்திய சிறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கைதிகளிடம் செல்போன் புழக்கம் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை குழுவில் இடம் பெற்றுள்ள வார்டன்கள் பிரபாகரன், பாலமுருகன், மாதேஸ்வரன், பூபதிராஜா, கார்த்தி, விஜய் ஆகியோர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இதில், டியூப் லைட் பட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை மீட்டனர். 1வது அறையில் தலை துவட்ட பயன்படும் டவலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் சார்ஜர், ஒயர் ஒன்றும் மீட்கப்பட்டது. சோப்பில் அழுத்தி வைக்கப்பட்டிருந்த சிம் கார்டையும் மீட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குண்டர் தடுப்பு சட்ட கைதிகள் சண்முகம் (எ) விக்கு(23), கார்த்தி(29), விசாரணை கைதி ரவி(எ) ரவிக்குமார்(31) ஆகியோருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் சிறை அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் கைதி கார்த்தியிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் ₹20 ஆயிரம் கொடுத்து செல்போனை சிறைக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தார். கொலை முயற்சி வழக்கில் கைதாகி 8 மாதமாக சிறையில் இருக்கும் கார்த்தி, கோபி என்ற கைதி கேட்டுக் கொண்டதற்கிணங்க செல்போனை உள்ளே கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து உதவி சிறை அதிகாரி ராகவன் என்பவரிடம் பேசியுள்ளனர். இதற்காக ₹20 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.அதன்படி விசாரணை கைதி ரவி, கோபியின் தம்பியிடம் பேசியுள்ளார். தொடர்ந்து, உதவி சிறை அதிகாரியான ராகவன், கோபியின் தம்பியிடம் பேசியுள்ளார். இதன்படி ₹20ஆயிரம் மற்றும் செல்போனை உதவி சிறை அதிகாரி ராகவனிடம் கொடுத்ததாகவும், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு, செல்போனை கைதி விக்கு(எ) சண்முகத்திடம் கொடுத்ததாகவும் அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வ தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஜெயிலர் ராஜமோகன் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். அதில், சிறையில் செல்போனை மறைத்து வைத்திருந்த கைதிகள் சண்முகம்(எ)விக்கு, கார்த்தி, ரவி(எ) ரவிக்குமார் ஆகியோர் மீதும், செல்போனை கைதிகளுக்கு கொடுத்த உதவி சிறை அதிகாரி ராகவன் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: