ஓசூரில் இருந்து 300 பேர் பேரணி மேகதாதுவில் முற்றுகையிட சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

ஓசூர்: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி, முற்றுகை போராட்டம் நடத்த சென்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினரை, மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9ம் தேதி முதல் பாதயாத்திரை நடந்து வருகிறது. இதனை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்தக் கோரியும், காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சுழற்சியை கைவிட்டு, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், மேகதாதுவில் 19ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  

 இதையொட்டி நேற்று முன்தினம், டெல்டா மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பேரணி துவங்கியது. திருவாரூரில் துவங்கிய பேரணி, தஞ்சை, திருச்சி, நாமக்கல், சேலம் வழியாக நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை வந்தடைந்தது. அங்குள்ள தனியார் மண்டபத்தில் இரவில் விவசாயிகள் தங்கினர்.  நேற்று காலை, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஓசூர் தர்கா பகுதியில் திரண்டனர். பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு, பேரணியாக புறப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஓசூர் இஎஸ்ஐ பகுதியில், நேற்று மதியம் விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக வந்த போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த பகுதியில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்து விவசாயிகள் கோஷமிட்டனர்.

Related Stories: