வேடசந்தூர் அருகே தொடரும் பாரம்பரியத் திருவிழா நிலாப்பெண்ணாக சிறுமி தேர்வு: ஆவாரம் பூக்களால் அலங்கரித்து அதிகாலை வரை பூஜை

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சியில் உள்ள கோட்டூர் கிராமம், மாசாடச்சியம்மன்  கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக நிலாப்பெண் தேர்வு விழா நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான  நிலாப்பெண் தேர்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பிரகதீஷா (11) என்ற 6ம் வகுப்பு மாணவி நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். முதலில், இவருக்கு ஊர் எல்லையில் உள்ள சரலைமேடு என்னுமிடத்தில் கிராமமக்கள் ஆவாரம்பூ வைத்து அலங்காரம் செய்தனர். பிறகு தலையில் ஆவாரம்பூ கூடையோடு ஊர்வலமாக முக்கிய தெருக்கள் வழியாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் முன்பாக மாவிளக்கு, முளைப்பாரி வைத்து கும்மியடித்து வழிபட்டனர்.  

இதனைத்தொடர்ந்து ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரது தலையில் இருந்த பூக்கூடையையும், தீப விளக்கையும் கிணற்றில் மிதக்க விட்டனர். அவை தண்ணீரில் மூழ்காமல் சுற்றி வரும் வரை கிராமமக்கள் அங்கேயே காத்திருந்தனர். அவை கிணற்றை சரியாக சுற்றி வந்தபின், நிலாப்பெண் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். கிராம மக்கள் கூறுகையில், ‘‘ஊர் மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் இந்த விழாவை நடத்துகிறோம்’’ என்றனர்.

Related Stories: