உ.பி. அரசியலில் பரபரப்பு பாஜ.வில் சேர்ந்தார் முலாயம் சிங் மருமகள்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மருமகள்  அபர்ணா யாதவ் நேற்று பாஜ.வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 10 தேதி தொடங்கி ஏழு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதில் சமாஜ்வாடியும் தீவிரம் காட்டி வருகின்றது. இதன் காரணமாக இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கட்சி தாவி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் நேற்று பாஜ.வில் இணைந்துள்ளார். இவர், முலாயம் சிங்கின் 2வது மனைவியின் மகனான பிரதீக் யாதவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அகிலேஷ் யாதவ் முலாயமின் முதல் மனைவியின் மகனாவார்.

துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜ மாநில தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் ஆகியோரது முன்னிலையில் அபர்ணா யாதவ் நேற்று பாஜ.வில் இணைந்தார். பின்னர் பேசிய அபர்ணா, ‘நாட்டின் நலனுக்கு தான் நான் முன்னுரிமை தருவேன். பாஜ அரசின் சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் பாராட்டுக்குரியவை. பிரதமர் மோடியின் பணிகளால் நான் ஈர்க்கப்பட்டேன்,” என்றார்.

இதைத் தொடர்ந்து, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சென்று பாஜ.வின் தேசிய தலைவர் நட்டாவையும் அபர்ணா சந்தித்தார். அவர் கட்சியில் இணைந்ததை நட்டா வரவேற்றார். இம்மாநிலத்தில் பாஜ.வை சேர்ந்த 3 அமைச்சர்கள், 5 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடியில் சேர்ந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முலாயம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை பாஜ இழுத்துள்ளது. இதனால், தேர்தலில் பரபரப்பு கூடியுள்ளது.

சமாதான முயற்சி தோல்வி

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘பாஜ.வில் அபர்ணா இணைவதை தடுக்கவும், அவரை சமாதானப்படுத்தவும் முலாயம் சிங் யாதவ் கடினமாக முயற்சி செய்தார். முதலில் நான் அபர்ணாவுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பொதுவுடைமை கொள்கை விரிவுபடுத்தப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

தேர்தலில் போட்டியா? அகிலேஷ் யாதவ் பதில்

உபி தேர்தலில் இதற்கு முன் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வரவில்லை. சட்டமேலவை உறுப்பினராக மட்டுமே இருந்து ஆட்சியை நடத்தி முடித்தார். அதேபோல், தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இப்போது சட்டமேலவை உறுப்பினராகவே இருக்கிறார். ஆனால், இம்முறை அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நேற்று பதிலளித்த அவர், ‘‘என்னை மக்களவைக்கு அனுப்பி வைத்த  அசாம் கர் தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்திய பின்தான், நான் சட்டமன்ற  தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன்,’’ என்றார்.

Related Stories: