புதுடெல்லி: நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலிகள் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 79 லட்சத்து ஆயிரத்து 241 ஆகியுள்ளது. இதில் 8 ஆயிரத்து 961 பேர் ஒமிக்ரான் வகை பாதிப்புக்கு உள்ளானவர்கள். அதே போல் வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும் 18 லட்சத்து 95 ஆயிரத்து 520 ஆகியுள்ளது.
கடந்த 232 நாட்களுக்கு பின் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவாகும். கடந்த ஆண்டு மே 31ம் தேதி சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 95 ஆயிரத்து 520 ஆக இருந்தது. ஒரே நாளில் 441 பேர் பலியானதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் கேரளாவில் 125, மகாராஷ்டிராவில் 53 மற்றும் மேற்குவங்கத்தினர் 34 பேரும் அடங்குவார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் நாட்டில் இதுவரை 158 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.84 பயிற்சி ஐஏஎஸ்களுக்கு பாதிப்புஉத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் லால்பகதுார் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி உள்ளது. இதில் பயிற்சி பெறுவதற்காக குஜராத் உள்பட பல மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் 480 பேர் வந்தனர். அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் 84 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.