டஸன் 129*, பவுமா 110 ரன் விளாசல் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

பார்ல்: இந்திய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், கேப்டன் பவுமா - வாண்டெர் டஸன் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.போலண்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் , தென் ஆப்ரிக்க அணியில் ஜான்சென் அறிமுகமாகினர். டி காக், ஜானிமன் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஜானிமன் 6 ரன், டி காக் 27 ரன், மார்க்ரம் 4 ரன்னில் வெளியேறினர்.

தென் ஆப்ரிக்கா 17.4 ஓவரில் 68 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் பவுமா - வாண்டெர் டஸன் ஜோடி அபாரமாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்தது. பவுமா 110 ரன் (143 பந்து, 8 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் ராகுல் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் டஸன் அதிரடியில் இறங்க, தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்தது. டஸன் 129 ரன் (96 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), மில்லர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ராகுல் 12 ரன் எடுத்து வெளியேற, தவான் - கோஹ்லி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். தவான் 79 ரன் (84 பந்து, 10 பவுண்டரி), கோஹ்லி 51 ரன் (63 பந்து, 3 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். ஷ்ரேயாஸ் 17, பன்ட் 16, வெங்கடேஷ் 2, அஷ்வின் 7, புவனேஷ்வர் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.ஷர்துல் - பும்ரா 9வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடினாலும், இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஷர்துல் 50 ரன், பும்ரா 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Stories: