கோயில்களுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை மறுதானம் செய்ய தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:  கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை, தனிநபர்களுக்கு மறுதானம் வழங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், பால் கொடுக்கும் பசுக்களை மட்டுமே கோயில்களுக்கு தானமாக வழங்க வேண்டுமென்று அரசாணையில் உள்ள நிலையில் பால் கொடுக்காத பசுக்களும் தானமாக வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக இவற்றை மறுதானம் செய்யும் போது அவற்றை அடி மாட்டிற்காக வெளிச்சந்தையில் விற்கிறார்கள் என்றார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பால் கொடுக்கும் மாட்டை மட்டுமே தானமாக வழங்க வேண்டுமென்று அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. அந்த பசுக்கள் அடிமாடாக விற்கப்படுவதாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், எந்த ஆதாரமும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்று தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்படியும், அரசாணைப்படியும் பசுக்களை மறுதானம் வழங்குவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: