கொரோனா 3வது அலை உச்சத்தில் உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி மனு: நாளை மறுநாள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்  எஸ்.பிரபாகரன் ஆஜராகி, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 3வது அலையான ஒமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 57,570 பேர் (நேற்று) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 4 வாரங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை  தாண்டும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் 387 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. எனவே, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கை நாளை மறுநாள் (நாளை) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: