தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஆன்லைன் கவுன்சலிங் 30ம்தேதி துவக்கம்

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சலிங் வரும் 30ம் தேதி துவங்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் சுப்பிரமணியன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். பின்னர், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: மருத்துவ பட்ட மேற்படிப்பில் 2,216 இடங்கள் உள்ளன. இதில், 1,053 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 1,163 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், இன்று முதல் கவுன்சலிங் துவங்குகிறது. ஏற்கனவே நடந்த துணை மருத்துவ படிப்பில் 16 ஆயிரத்து 693 இடங்களில் 16 ஆயிரத்து 486 இடங்கள் நிரம்பின. 207 இடங்கள் காலியாக உள்ளன.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் 4,349 எம்பிபிஎஸ், சுயநிதி கல்லூரிகளில் 2,650 என 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 436 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல், பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மொத்தம் 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான தரவரிசை பட்டியல் வரும் 24ம் தேதி வெளியிடப்படும்.

தொடர்ந்து, 27ம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நடைபெறும். தொடர்ந்து, 28, 29ம் தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சலிங் நடைபெறும். இந்த 3 நாளில், குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பதால், நேரடி கவுன்சலிங் முறையில் நடைபெறும். பின்னர் 30ம் தேதி முதல் அனைத்து பிரிவினருக்கான பொது கவுன்சலிங் நடைபெறும். இவற்றில், அதிகம் பேர் பங்கேற்பதால், ஆன்லைன் முறையில் நடைபெறும். இதற்கான விரிவான தகவல் குறிப்பேடு, இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தாமதமாக நடைபெற்ற நீட் தேர்வு மற்றும் உச்சநீதிமன்றத்தில் இருந்த பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு காரணத்தால் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-2022ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தலாம் என கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-2022ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு நேற்று www.mcc.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் தொடங்கியது. இந்தியா முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15% எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வில் தகுதிப்பெற்ற மாணவர்கள் இன்று முதல் வருகிற 24ம் தேதி பிற்பகல் 12 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இன்று முதல் வருகிற 24ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை மாணவர்கள் இடங்களை தேர்வு செய்யலாம். அதைத் தொடர்ந்து வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வருகிற 29ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் வெளியிடப்படும். அதன்படி வருகிற 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 4ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு பிப்ரவரி 9ம் தேதியும், 3ம் சுற்று கலந்தாய்வு மார்ச் 2ம் தேதியும், 4ம் சுற்று கலந்தாய்வு மார்ச் 21ம் தேதியும் தொடங்குகிறது.

Related Stories: