10, பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி இறுதி நாள்

சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை 31ம் தேதிக்குள், அனைத்து பள்ளிகளும் தேர்வுத்துறை இணைய  தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மே மாதம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்த மாணவ மாணவியரின் பெயர்கள், பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட முழுமையான விவரங்களை திரட்டி அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாணவர்களின் பட்டியல்கள்(நாமினல்ரோல்) தயாரிக்கும் பணியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த நாமினல் ரோலுக்கு இறுதி வடிவம் கொடுக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. எனவே, நாமினல் ரோல்களை இம்மாத இறுதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல்கள் தயாரிக்க உயர்நிலை மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 4ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான நாட்களில் இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பதிவேட்டுக் கட்டணத்தையும் இணைய  தளம் மூலம், செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணவர்களின் விவரங்களை இணைய  தளம்  மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் விவரங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம்  செய்வதற்கும், இணைய தளம் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தவும் 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களின் பட்டியல்களை தயாரிப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பு. இதன் பிறகு இந்த பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது. எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு பெயர் பட்டியல்களை 31ம் தேதிக்குள் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

Related Stories: