தமிழகம் முழுவதும் 600 இடங்களில் இன்று முதலாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: சென்னையில் 160 இடங்களில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமார் 10 லட்சம் பேர் தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.

வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 600 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “இந்த முகாம் மட்டுமின்றி சனிக்கிழமை தோறும் நடைபெறும் முகாம், வழக்கமான மையங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.

Related Stories: