நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை; நாளை அல்லது 24ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க கமிஷன் திட்டம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக  நடத்த திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து ஜனவரி 21 அல்லது 24ம் தேதி தேர்தல் தேதிகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, தேர்தல் தொடர்பான பணியை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. முதற்கட்டமாக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதே நேரத்தில் வார்டுகள் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு நடந்தது. இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாபு முருகவேல், காங்கிரஸ் சார்பில் துணை தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் நவாஸ், பாஜ சார்பில் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் ஏழுமலை, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ஆறுமுகம், தேமுதிக சார்பில் மாநில இளைஞரணி தலைவர் நல்லதம்பி, வழக்கறிஞர் பாலாஜி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் சார்லஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்ஸ், மணி சங்கர் மற்றும் தேசிய வாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் பிரதிநிதிகள் உட்பட 11 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உட்பட பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்தும் அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்தன. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துகளை உன்னிப்பாக கேட்ட மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், அதை தேர்தலில் செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன் கூறியதாவது: கடந்தாண்டு 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்படி நடைபெற்றதோ, அதேபோன்று இந்த தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம், நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என நம்புகிறோம். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி, யாருக்கும் தொற்று ஏற்படாத வண்ணம் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம்  கோரிக்கை வைத்துள்ளோம். அத்தனையும் நிறைவேற்றி தருவதாக தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்: அதிமுக சார்பில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தலுக்கு துணை ராணுவ படையை பாதுகாப்பிற்கு கொண்டு வர வேண்டும். சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதை ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். கொரோனா தொற்று பரவாமல் தகுந்த வழிகாட்டு நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளோம். இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு இருக்கும் பட்சத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்ட வேட்பாளர்களும், பிரசாரம் செய்பவர்களும் எப்படி செல்வார்கள் என்பதை விளக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது போல தமிழகத்திலும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

காங்கிரஸ் மாநில துணை தலைவர் தாமோதரன்: தேர்தல் நேரத்தை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க கோரிக்கை விடுத்தோம். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு செய்ய ஒரு மணி நேரம் கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டியன்:  ஜாதி, மதங்களை முன்வைத்து வாக்கு சேகரிக்க அனுமதிக்க கூடாது. இது எதிர்காலத்தை சீரழித்து விடும் என்று தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன்: பணம், அன்பளிப்பு போன்று வாக்காளர்களை திசை திருப்பும் விஷயங்களை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் வரை வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகளை களைய வேண்டும் எனக்கேட்டுக் கொண்டுள்ளோம். தேர்தல் நடைபெறும் இடங்களில் சிசிடிவி பொருத்தி அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய வேண்டும்.

பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். மத்திய பாதுகாப்பு படையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஒற்றை சாளர முறை் பின்பற்ற வேண்டும். மேலும், 12 மாநகராட்சிகளை பெண்களுக்கு ஒதுக்கியிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஒரு சில இடங்களில் பெண்களுக்கு அதிகமாகவும், சில இடங்களில் பெண்கள் இல்லாமலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.  தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவிக்களை பொருத்த வேண்டும். தேர்தலுக்கான தேதி அறிவித்து உடனடியாக வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்காமல், அவசர அவசரமாக அறிவிப்பதை தவிர்த்து போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே, முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். .

இவ்வாறு அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து ஜனவரி 21ம் தேதி அல்லது 24ம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

* பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான வேலையை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் நேற்று காலை 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5 மாநில தேர்தல்களை நடத்துவது போன்ற நடைமுறைகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றியுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

* கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை

மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று மாலை 5 மணியளவில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, தேர்தல் பணிகளை உடனடியாக துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, கடந்த தேர்தலின் போது, ஒரு சில வாக்குச்சாவடிகளில் பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோன்று இம்முறை பிரச்னை  ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க எஸ்பிக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன. குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்துவது குறித்து மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று, பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நகராட்சி, மாநகராட்சிகளை கண்டறிந்து அங்கு, கூடுதல் போலீசாரை நியமனம் செய்து, அந்த பகுதிகளை போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எஸ்பிக்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.

Related Stories: