பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தையும், ஜவுளித் துறையின் செயல்பாட்டை பாதிக்கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, கடந்த நவம்பர் மாதம் தான் எழுதியிருந்த கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

பருத்தி மற்றும் நூல் விலை ஏற்ற இறக்கம் மற்றும் துணிகள் மற்றும் ஆடைகளின் விலையில் அதன் பாதகமான தாக்கம் ஆகியவற்றின் கடுமையான நிலைமையை தமிழ்நாடு ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்து வருவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தனது முந்தைய கடிதத்தில், பருத்தி மற்றும் நூலின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தான் ஏற்கெனவே கோரியிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்:

1.    ஊக வணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக, பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

2.    சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்குபெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

3.    உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இருப்பினும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கருதுவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நூல் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, 21.01.2022 அன்று மாநிலம் முழுவதும் விசைத்தறி, ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும், தற்போது நிலவும் நூல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 17.01.2022 மற்றும் 18.01.2022 ஆகிய இரண்டு நாட்கள் உற்பத்தியை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நிறுத்தி விட்டதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 நவம்பர்-டிசம்பர் மாதம் முதல், 2021 நவம்பர்-டிசம்பர் வரை நூல் விலை உயர்வில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தினையும், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவிடும் விலையினையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஏராளமான விசைத்தறிகள், ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தித் தொழிலகங்கள் இயங்குவது விரைவில் சாத்தியமற்றதாகிவிடும் என்றும், இதன் விளைவாக மாநிலத்தில் பெரிய அளவிலான வேலையின்மை மற்றும் தொழில் துறை அமைதியின்மை ஏற்படும் என்றும் தெரிவித்து, இந்த ஆபத்தான நிலைமையை சீரமைத்திட இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: