டாக்கா: வங்கதேசத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் ரைமா இஸ்லாம் ஷிமு (45). அங்கு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர், டி.வி நாடகங்களில் நடித்ததுடன் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார். பங்களாதேஷ் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இணை உறுப்பினராகவும் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட ரைமா இஸ்லாம் ஷிமு, நேற்று முன்தினம் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள கெரனிகஞ்ச் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டைக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.
பிறகு நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சர்சலிமுல்லா மருத்துவக்கல்லூரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ரைமா இஸ்லாம் ஷிமுவின் மரணம் தொடர்பான விசாரணைக்காக அவரது கணவர் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ரைமா இஸ்லாம் ஷிமுவின் கணவர், கடந்த ஞாயிறு அன்று தனது மனைவியை காணவில்லை என்று கலாபகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இறந்த நடிகையின் கொலையில் கணவருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஷகாவத் அலி நோபல் என்பது அவரது பெயர். நடிகை கொலை சம்பவத்தில் கணவரின் நண்பர் மட்டுமின்றி, செல்வாக்கு மிகுந்த வங்கதேச நடிகர் ஒருவரும் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.