நாளை இரவில் தெப்ப திருவிழா: நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் உழவார பணிகள் விறுவிறுப்பு

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் நாளை தெப்ப திருவிழா நடக்க உள்ள நிலையில், உழவார பணிகள் இன்று விறுவிறுப்பாக நடந்தன. தெப்ப திருவிழாவுக்கு திருக்கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில், இந்து முன்னணி சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டது. ‘திருநெல்வேலி’ பெயர்வரக் காரணமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கடந்த 9ம்தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் உள் திருவிழாவாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விழாவின் 4ம் நாளான கடந்த 12ம்தேதி நண்பகலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று சுவாமி, அம்பாள், தாமிரபரணி தேவி, அகஸ்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேஷ்வரர், அஸ்திரதேவி, அஸ்திரதேவர் ஆகியோருக்கு தைப்பூசத் தீர்த்தவாரி, தாமிரபரணி ஆற்றில் நடக்காமல் கோயில் உள்பகுதியில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் 5 தினங்களுக்கு பின்னர் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் இன்று பக்தர்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தைபூச திருவிழாவை முன்னிட்டு இன்று சவுந்திரசபா மண்டபத்தில் வைத்து பிருங்கிரத முனி சிரேஷ்டர்களுக்கு சுவாமி திருநடனக் காட்சி விமர்சையாக நடந்தது. தொடர்ந்து சவுந்திர சபா நடராஜர் திருநடனக் காட்சியும் நடந்தது. சுவாமியும், அம்பாளும் உள்வீதி வலம் வந்தனர். சௌந்தர சபையில் அபிஷேகம், அலங்காரத்தோடு தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்தோடு இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். 5 தினங்களுக்கு கோயில் திறக்கப்பட்டதால், இன்று பக்தர்கள் கூட்டமும் கோயிலில் அதிகம் காணப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமாக தை பூச திருவிழாவின் தெப்ப திருவிழா நிகழ்ச்சிக்கு திருக்கோயில் நிர்வாகம் இவ்வாண்டு அனுமதி வழங்கவில்லை. பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பரிசீலனை செய்து நாளை நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் திருவிழா நடத்த அனுமதி வழங்கினர். இதையடுத்து நெல்லையப்பர் கோயில் வெளிதெப்பத்தில் இன்று கோயில் நிர்வாகம் சார்பில் உழவார பணிகள் நடந்தன. தெப்பம் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்தன.

சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி நாளை (20ம்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. தெப்ப திருவிழாவை நடத்தக்ேகாரி இந்து முன்னணியினர் இன்று நெல்லையப்பர் கோயில் முன்பு அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: