×

கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு நோய் தொற்று அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக அரசே செய்தி குறிப்பில் வெளியிடுகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?  தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை மற்றும் அதனுடைய பார்களின் முன்பும் நூற்றுக்கணக்கானோர் எந்தவிதமான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூடி நிற்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு முன்னாள், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவிய கொரோனா நோய் தொற்று, தற்போது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து 9 பேருக்கு பரவுகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tasmak , Tasmag liquor stores should be closed until corona infection comes under control: Edappadi Palanisamy
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...