×

சுருக்குமடி வலைகளை மீனவர்கள் பயன்படுத்த தடைவிதிக்கும் விதியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டு மரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

கடந்த 2000ம் ஆண்டில் உள்ள விதிகளை பின்பற்றியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.  2000ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராமல், அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட விதிகளை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Chennai High Court , Chennai High Court dismisses case against ban on use of short nets by fishermen
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...