அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப்பணி ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தண்டையார்பேட்டை: அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப்பணி ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் உள்ளது. பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் பழுதடைந்து இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சென்னை மாநகராட்சியும் ரயில்வே துறையும் இணைந்து மேம்பாலத்தை சீரமைக்க முடிவு செய்தன.

அதன்படி பணி தொடங்கியது. பல்வேறு காரணங்களால் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணியை  முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது துறைமுகம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பி.கே.சேகர்பாபு கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும் மேம்பால பணியை  விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தி வந்தார்.  தற்போது திமுக ஆட்சியில் ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியை ரயில்வே துறையும், ஏறும், இறங்கும் பகுதியை  சென்னை மாநகராட்சியும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்ட்ரல் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து,  துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட திருப்பல்லி தெரு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டினர். இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் யானைக்கவுனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி கிடப்பில் போடப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு  மேற்கண்ட ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை 1000 கோடி  ரூபாயில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசு தேதி கொடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: