#Each For Equal

நன்றி குங்குமம் தோழி

கடந்த மார்ச் 8 ஆம் தேதி #EachFor Equal என்ற மையக்கருவை முன்னெடுத்து, 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. “நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்” என்ற வாசகத்தை இந்த பிரசாரம் முன்னெடுத்தது. “ஒவ்வொருவரின் செயல், உரையாடல், நடந்துகொள்ளும் முறை, எண்ணங்கள்… இந்த பெரும் சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும்” என்பதையும் இது தெளிவாக்கியது. கடந்த  காலங்களில், பெண்களால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக போராட்டங்கள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்திருப்போம். 2017ஆம் ஆண்டு, #MeToo என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பெண்கள் பலர் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை வெளியில் சொல்ல ஆரம்பித்தனர். விளைவு 2018ஆம் ஆண்டில், #MeToo தொடர்பான கலந்துரையாடல்கள் உலகளவில் மாறின.

அமெரிக்காவில் நடந்த இடைத் தேர்தலில், வரலாறு காணாத அளவிற்கு பெண் பிரதிநிதிகள் தேர்வாகினர். 2019ஆம் ஆண்டு, வடக்கு அயர்லாந்து, கருக்கலைப்பை குற்றச்செயல் அல்ல என்று அறிவித்தது. அதேபோல், பொதுவெளியில் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு உடையணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்த சட்டத்தை சூடான் அரசு திரும்பப் பெற்றது. இவ்வாறாக உலகம் முழுவதும் பெண்களுக்கான சமத்துவம், சுதந்திரம் போன்றவைகள் அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்தான். அந்த போராட்டம் இன்னும் வீரியமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு UNAIDS அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த அறிக்கையில், வாரத்திற்கு 14 முதல் 24 வயதுடைய பெண்களில் சுமார் 6,000 பேர் உலக அளவில் AIDS நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 15-49 வயதுடைய பெண்களின் இறப்புக்கு AIDS-ம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பரவுகிறது. AIDS நோய் என்பது கொரோனா வைரஸ் போல பெண்களை அழிக்கும் பேராயுதமாக இருப்பதோடு, குழந்தை பெறும் தகுதியுடையவர்

களையே பெரிதும் பாதிப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெண்களிடையே கல்வி அறிவு குறைவாக இருப்பதே இதற்கு முதன்மை காரணம். அடுத்து மோசமான பொருளாதார நிலையினால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளில் பெண்களிடையே இந்த நோய் தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது.

கருத்தடை வழிமுறைகள் பற்றிய அறிவு இவர்கள் மத்தியில் சரியாக சென்று சேராத காரணத்தினால் இதனை மாற்றியமைப்பதும் பெரும் கடினமாக இருக்கிறது… இது போன்ற பல காரணங்களை UNAIDS அமைப்பு அடுக்கியுள்ளனர். HIV தொற்று என்பது இன்றைய நாளில் பெண்களின் பெரும் பிரச்சினையாகவும், தெற்கு ஆப்ரிக்கா சகார பகுதிகளில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், ஒவ்வொரு பத்து பெண்களை எடுத்துக் கொண்டால் அதில் ஏழு பேருக்கு இது குறித்த பாதிப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. UN - போஸ்வான நாட்டில் நடத்திய ஆய்வில் பெண்கள் பள்ளிக்குச் சென்றதால், அதாவது ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி கற்கும் போது, அவர்களிடையே வளர்கிற அறிவு HIV பற்றிய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 12% AIDS நோய் தொற்று குறைவாகியுள்ளது.

 

ஆனால், ஏழை நாடுகளில் ஏழ்மை நிலை காரணமாக ஒவ்வொரு மூன்று பெண் பிள்ளைகளில், ஒரு பிள்ளை பள்ளிக்கு போகாமல் இருக்கிறது. படித்தால் பெண்கள் வருமானம் ஈட்டுவதினால், ஏற்றத்தாழ்வினை குறைக்க முடியும். அதன் மூலமாக மற்ற விஷயங்கள் நடக்கக் கூடும் என்கிறார்கள். பெண்களை எய்ட்ஸ் நோயிலிருந்து காப்பாற்றுவதற்கும் அவர்களை அறிவுபூர்வமாக முன்னேற்றுவதற்கும் அவர்களை ஏழ்மை நிலையிலிருந்து மீட்டு எடுப்பதற்கும் பெரும் தடையாக இருப்பது கலாச்சாரம் என்ற போர்வையில் அவர்கள் அந்த எல்லைகளை தாண்ட முடியாமல் இருப்பது முக்கிய பிரச்சினை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், 25 வருடங்களுக்கு முன் சீனாவில் செய்யப்பட்ட “பெய்ஜிங் டிக்லரேஷன்” என்ற பிரகடனம் காரணமாக பெண்கள் பள்ளிக்கு செல்வது கடந்த கால் நூற்றாண்டுகளில் அதிகரித்திருக்கிறது. உயிர் வாழும் காலம் நவீன மருத்துவ துறையின் வளர்ச்சியினால் அதிகரித்துள்ளது.  ஒரு காலத்தில் மரண நோயாக இருந்த AIDS, தற்போது மருந்துகளின் கண்டுபிடிப்புகளினால் பெண்களின் உயிர் வாழும் காலம் AIDS-ல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகமாகவே

இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.   

பெண்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அவமதிப்புகள், போதிய சம்பள ஊதிய இடங்கள் வழங்காதது, அரசியலில் கொடுக்க வேண்டிய பாத்திரங்களை கொடுக்காதது, பெண்களை நிந்தனை செய்வதற்கு எதிராக அரசியல்-சமூதாய-மத ரீதியான போராட்டங்கள் வராமலும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டே செல்கிற நிலையில் AIDS என்பது அவர்களை அழிக்கும் புதிய ஆயுதமாக மாறி இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>