சூனாம்பேடு அருகே சாலை அரிப்பால் ராட்சத பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்

செய்யூர்: சூனாம்பேட்டில் இருந்து செய்யூர் செல்லும் சாலையில், கடந்த மழையின்போது அரிப்பு ஏற்பட்டு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அவ்வழியே கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த சாலையை சீரமைத்து, சிறிய மேம்பாலம் அமைக்க மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சூனாம்பேடு-செய்யூர் நெடுஞ்சாலையில் கடுக்கலூர் கிராமம் அமைந்துள்ளது. இதன் வழியே நாள்தோறும் அரசு பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் வெளியேறும் ஓடை அமைந்துள்ளது. மழைக் காலங்களின்போது, இந்த ஓடையின் வழியே வெளியேறும் வெள்ளநீர் பயிர் நிலங்களை அழிப்பதுடன், நெடுஞ்சாலையில் அரிப்பு ஏற்பட்டு, 6 அடி வரை ராட்சத பள்ளங்கள் உருவாகும். இப்பள்ளங்களை அவ்வப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைக்கின்றனர். எனினும், கடந்த மாதம் பெய்த கனமழையின்போது இந்த நெடுஞ்சாலையோர ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அந்த நெடுஞ்சாலையில் அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதமடைந்தது. அதன் ஓரங்களில் ராட்சத பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லும்போது, சாலையோர ராட்சத பள்ளங்களில் விபத்துக்கு உள்ளாகும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏராளமான வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்கவோ அல்லது சிறிய மேம்பாலம் அமைத்து தர மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: