பழுதான பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பள்ளி கட்டிடம் பழுதாகி இடியும் நிலையில் இருப்பது குறித்து தமிழ் முரசு நாளிதழில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அக்கட்டிடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, கானகோயில் பேட்டை பகுதியில், கடந்த 1924-ம் ஆண்டில் துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஓடுகள் வேய்ந்த பழமையான கட்டிடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அக்கட்டிடம் நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி, தற்போது அதன் ஓடுகள் உடைந்து, பக்கவாட்டு சுவர்களில் விரிசல்களுடன் காணப்பட்டது. கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழ ஆரம்பித்தது. இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி வளாகத்தின் மீதமுள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் எப்போது இடிந்து உயிராபத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் தவித்து, அக்கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தமிழ் முரசு நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், நேற்று இப்பள்ளி வளாகத்தில் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்த பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. பழுதான கட்டிடத்தை இடித்து அகற்ற துரித நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் தமிழ் முரசு நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: