×

காய்கறி சந்தை வியாபாரிகளிடம் ரூ.2 கோடி பணம் வசூலித்து மோசடி: தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது

ஈரோடு: ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளிடம் இரண்டு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒரு அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளாக உள்ள அதிமுக பிரமுகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 2015ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் பணம் வசூலித்துள்ளனர். அந்த பணத்தில் வாங்கிய 20 ஏக்கர் நிலத்தை 5 நிர்வாகிகள் தங்கள் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் பதிவு செய்தனர். வாங்கிய நிலத்தை பிரித்து தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உறுப்பினர்களுக்கு தெரியாமல் 20 ஏக்கரையும் 12 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவரான அதிமுக மாவட்ட பிரிதிநிதி பழனிச்சாமி, அவரது மனைவி மேகலா, மகன் வினோத்குமார், வியாபாரிகள் சங்க செயலாளரான அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் முருகேசன், அவரது மனைவி சாந்தி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பொருளாளர் வைரவேல், சங்கத்தலைவரின் மகன் வினோத்குமார், துணைச்செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சங்க செயலாளரும் அதிமுக கருங்கல்பாளைய பகுதி செயலாளருமான முருகேசனை திண்டிவனத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 7 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags : arrest
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்