ரூ2 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக செயலாளர் சிக்கினார்

ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடந்த மாதம் ஈரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும் அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும் அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், சங்கத்தின் பொருளாளரும் அதிமுக வார்டு செயலாளருமான ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த வைரவேல், சங்க துணை தலைவரும்,  அதிமுக வார்டு செயலாளருமான குணசேகரன், துணை செயலாளரும் அதிமுக உறுப்பினருமான ஆறுமுகம், பி.பி.கே.பழனிச்சாமியின் 2வது மனைவி மேகலா,

முருகசேகர் மனைவி சாந்தி, குணசேகரன் மனைவி ஜோதிமணி, ஆறுமுகம் மனைவி ரேவதி, வைரவேல் மனைவி ஜெயந்தி, பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரவேல், வினோத்குமார், ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்தனர். இந்தநிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கருங்கல்பாளையம் அதிமுக பகுதி செயலாளரும் சங்கத்தின் செயலாளருமான முருகசேகர் இன்று சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: