பட்டாபிராமில் திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பட்டாபிராம்: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஒரு தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 16 வயது மகள் உள்ளார். கடந்த ஆண்டு, மார்ச் 26ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், அந்த சிறுமியை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த சிலம்பரசன் (22) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை பட்டாபிராம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி சிலம்பரசன் கடத்தி சென்று, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை திருநின்றவூர், பாக்கம் அருகே ஒரு தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: