‘‘கோபத்தில் வரும் தாயை சமாதானப்படுத்தும் நிகழ்ச்சி’’ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் கோலாகலம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோபத்துடன் வரும் தாயாரை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்தும் பிரணய கலக உற்சவம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நேற்று நடந்தது. கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதுதான் இந்த உற்சவத்தின் நோக்கமாகும். இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே (வராக சுவாமி கோயில் எதிரில்) வந்தனர். இதைத்தொடர்ந்து, மலையப்ப சுவாமி 4  மாடவீதி வழியாக வராக சுவாமி கோயிலுக்கு எதிர்திசையில் வந்தடைந்தார். அப்போது தாயார்களை சுவாமி சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள், அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில் நின்றனர்.

பின்னர், மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் ஆழ்வார் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானப்படுத்தினர். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பினர் மூன்று முறை பூப்பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசியும் அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி தரப்பினர் பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடைபெற்றது. சமாதானப்படுத்திய பிறகு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி இணைந்து கோயிலுக்கு எழுந்தருளினர். அப்போது, வராக சுவாமி கோயில் எதிரே உள்ள 4 மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து ‘கோவிந்தா கோவிந்தா’ என தரிசனம் செய்தனர்.

Related Stories: