குலமங்களத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 500 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களத்தில் இன்று நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அவற்றுடன் மல்லுக்கட்டி வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் கிடைத்தன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்துகொண்டன. இந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கு கார், பைக் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குலமங்களத்தில் மலையக்கோயில் தைப்பூச விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கியது. 180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். நச்சாந்துபட்டி மருத்துவ குழுவினர் காளைகள் மற்றும் வீரர்களை பரிசோதனை செய்த பின்னரே காளைகள், வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு  ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளில் சில வீரர்களின் பிடியில் சிக்கினாலும் பெரும்பாலான காளைகள் சிக்காமல் தப்பியது. ஒரு சில காளைகள் களத்தில் நின்று வேடிக்கை காட்டியது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு ேபாட்டியில் காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

காளை முட்டி வாலிபர் பலி

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாதாகோயில் அருகே உள்ள மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 490 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 370 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றபோது காளை முட்டி திருச்சி வண்ணாங்கோவில் பாரதி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார்(27) படுகாயம் அடைந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுபோல் காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் காசிநாதன் மற்றும் 21 வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 45 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Related Stories: