ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பான விதிகளில் ஒன்றிய அரசின் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்பும் விதிகளில் மாற்றம் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடிக்கு மம்தா எழுதியிருக்கும் கடிதத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தொடர்பான விதிகளில் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு பணிகளுக்கு தேவையான அதிகாரிகளை தேர்வு செய்ய வசதியாக அனைத்து மாநில அரசுகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரிகளை ஆண்டின் தொடக்கத்திலேயே ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று புதிய வரைவு வீதியில் கூறப்பட்டிருப்பதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு பணிகளுக்காக அதிகாரிகளை மொத்தமாக ஒதுக்கி வைப்பது மாநில அரசின் நிர்வாகத்தை பாதிக்கும் என்று கூறி இருக்கும் மம்தா அவ்வாறு பிரித்து வைக்கப்படும் அதிகாரிகளை முக்கியத்துவம் வாய்ந்த திட்டப்பணிகளில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் இல்லாத போதும் ஒன்றிய அரசு அழைத்துக்கொள்ள முடியும் என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய மாநில அரசுகள் இடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக உள்ள புதிய விதிகளை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: