தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டு தலங்கள் திறப்பு: பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்துவருவதால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு கூடுதலாக மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் மட்டும்  பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை நாட்களான 14ம் தேதி முதல் நேற்று வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் செல்லும்போது கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற முடியாத நிலைமை ஏற்படும். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பொங்கல் விழா நாட்களில் கோயில்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து கோயில்கள், பேராலயங்கள், மசூதிகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் 5 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சியில் ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் உற்சாகத்துடன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மெயின்கார்டு கேட்டில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர் வலி தர்கா, நாகையில் நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், தஞ்சை பெரியகோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், காட்டுப்பாவா பள்ளிவாசல் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், கரூர், பெரம்பலூர், காரைக்கால் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories: