மத்தூர் அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை திருட்டு-2 இளம்பெண்கள் அதிரடி கைது

போச்சம்பள்ளி : மத்தூர் அருகே ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை, பணத்தை திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் போலீஸ்காரர் அதியமான். இவரது மனைவி கார்த்திகா(30). பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்பத்தினருடன் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு அதியமான் சென்றிருந்தார். நேற்று தனியார் பஸ்சில் குடும்பத்தினருடன் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சில் இடம் இல்லாததால் நின்று கொண்டிருந்த கார்த்திகா வைத்திருந்த பையை, இருக்கையில் அமர்ந்திருந்த 2 பெண்கள் கேட்டதால், அவர்களிடம் பையை கொடுத்தார். இந்நிலையில், களரம்பதி ஏரிக்கரை அருகே பஸ் சென்றுகொண்டிருந்த போது, அந்த பெண்களில் ஒருவர் பையில் இருந்த நகை மற்றும் ₹660 பணத்தை திருடி மறைத்து வைத்தார். இதனை பார்த்த கார்த்திகா, அந்த பெண்களிடம் கேட்டபோது, நாங்கள் பணத்தை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்தால் தான் நம்புவீர்கள் என கூறிய அந்த பெண்களே, மத்தூர் போலீசாருக்கு தகவலையும் கொடுத்தனர்.

இதையடுத்து பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. சம்பவ இடம் வந்த மத்தூர் போலீசார், அந்த பெண்களிடம் விசாரித்ததில், அவர்கள் பணத்தை எடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டையை சேர்ந்த மாணிக்கம் மனைவி பிரியா(32), மேல்ரவத்தவாடியை சேர்ந்த குரு மனைவி காயத்ரி(28) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: