கம்பிவேலியில் சிக்கி படுகாயமடைந்த யானைக்குட்டியை ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி-வனத்துறையினர் மும்முரம்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த 2 வயது யானைக்குட்டியை, வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி வனப்பகுதியில், 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானை கூட்டத்திலிருந்து பிரிந்த 2 வயதான குட்டி யானை, நேற்று காலை வனப்பகுதியின் ஓரத்தில் உள்ள கம்பி வேலியில் சிக்கியது.

அதில் அதன் துதிக்கையில் பலத்த காயமேற்பட்டது. இதனை பார்த்த வனத்துறையினர் அதனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் யானைக்குட்டி கம்பியில் இருந்து விடுவித்துக் கொண்டு, படுகாயத்துடன் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி மற்றும் வனச்சரகர்கள் சுகுமார், முருகேசன், ரவி, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர், ஜவளகிரி வனப்பகுதிக்கு சென்று யானைக்குட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று, யானைக்குட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், அடர்ந்த வனப்பகுதிக்குள் ட்ரோன் கேமராவை அனுப்பி, குட்டி யானை எங்குள்ளது என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர். துதிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்குட்டியை. இன்று மாலைக்குள் மீட்டு அதற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்து, மீண்டும் அதன் கூட்டத்தோடு சேர்க்க வனத்துறையினரும், வனத்துறை மருத்துவ குழுவினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: