வடமாடு மஞ்சுவிரட்டு: 11 காளைகள் பங்கேற்பு-9 பேர் கொண்ட குழுவினர் களமிறங்கினர்

திருமயம் : அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் அந்தோணியார் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

இப்போட்டியானது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த நிலையில் போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11 காளைகள் பங்கேற்றன.

ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களமிறங்கினர்.ஒரு காளையை அடக்க 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த வீரர்கள் காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை வீரர்கள் அடக்கிவிட்டால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாக வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் காளைகளை சில குழுவினர் போட்டி போட்டு தழுவினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் வீரர்களை திக்குமுக்காடச் செய்து பரிசுகளை வென்றது. மேலும் இதில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரொக்க பணம், தங்ககாசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்திற்கும் அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாடுகளை அடக்க முயன்றபோது 7 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த வீரர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

Related Stories: