காவேரிப்பாக்கத்தில் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்வதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டதால் நன்றி தெரிவித்தனர்.காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வங்கிகள், வருவாய் அலுவலர் அலுவலகம், காவல் நிலையம், உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது.  இதனால் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பனி ஊழியர்கள், என அனைத்து தரப்பினரும் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.

மேலும் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் கடந்த 8ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே வந்து செல்லாமல், வெளியே தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று செல்கின்றன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து அரசு அதிகாரிகள், நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்லாமல், பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்ளே பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிச்சென்றதால், மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: