நகராட்சி சந்தைக்கு மாடு வரத்து குறைந்தது வியாபாரிகள் குறைவால் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று மாடு வரத்து குறைவாக இருந்தாலும், வியாபாரிகள் வருகையும் குறைவால் விற்பனை மந்தமானது. பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தைக்கு, இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திராவில் இருந்து மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும், கேரள வியாபாரிகள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் பலரும் நேரடியாக வந்து, பெரும்பாலான மாடுகளை கூடுதல் விலைக்கு வாங்கி சென்றனர்.

அதிலும், கடந்த வாரத்தில் நடந்த சந்தை நாளின்போது, பொங்கல் பண்டியையையொட்டி, தங்களுக்கு தேவையான நாட்டு மாடுகளை விவசாயிகள் அதிகம் வாங்கியதால், விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால், இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. மேலும், பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச திருவிழா அடுத்தடுத்து வந்ததால் மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் இல்லாமல், தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்ட பகுதியிலிருந்து வந்த வியாபாரிகளே குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர்.

வியாபாரிகள் வருகை குறைவால், மாடு விற்பனை மிகவும் மந்தமானது. இதில், பசுமாடு ரூ.28 ஆயிரத்துக்கும், நாட்டு மாடு ரூ.32 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.28 ஆயிரத்துக்கும், ஆந்திர காளை மாடுகள் ரூ.36 ஆயிரத்துக்கும், கன்று குட்டி ரூ.13 ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு மாடுகள் விற்பனையானது. கடந்த வாரத்தில் ஒரேநாளில் ரூ.1.80கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் நேற்று ரூ.1.35 கோடி வரை மட்டுமே வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: