கொடைக்கானல் ஏரி சாலையில் பட்டுப்போன மரங்களால் அபாயம்-வெட்டி அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கொடைக்கானலில்  தொடர்ந்து சாரல் மழை, பலத்த காற்று வீசுவது வாடிக்கையாகும். இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்படுவதும் சகஜமான ஒன்று. இந்நிலையில் கொடைக்கானல் ஏரி சாலைப் பகுதியில் ஆபத்தான நிலையில் சில மரங்கள் உள்ளன. எந்த நேரமும் விழும் அபாயத்தில் உள்ள இந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப்பகுதியில் காலையும், மாலையும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து நடைபயிற்சி செய்வது வழக்கம். அத்துடன் இந்த சாலை வழியாக பல இடங்களுக்கு வாகனங்களில் பயணிப்பவர்கள் உள்ளனர்.

ஏரிச்சலை அருகே ஆபத்தான இந்த மரங்கள் முறிந்து விழும் நிலையில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையும் உள்ளது. இதேபோல கொடைக்கானல் நகர் பகுதியில் பல குடியிருப்பு இடங்களில் ஆபத்தான நிலையில் பல மரங்கள் உள்ளன. எனவே ஆபத்தான இந்த மரங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: